Tuesday, June 28, 2005

பன்னியன்


'06 ஜூன், 28 செவ். 13:48கிநிநே.

டோண்டு முதற்கொண்டு, முத்து, ஸ்ரீரங்கன் வரையான பலர் அநாமதேயங்கள் குறித்து அளவுக்கு மீறி அநாவசியமாகக் கவலைப்பட்டுக்கொள்கின்றீர்களெனத் தோன்றுகின்றது. நிச்சயமாக, யாரும் அறியா அநாமதேயங்களாகப் பதிவதும் அறிந்த ஒருவர் பெயரிலே அநாமதேயங்கள் பதிவதும் வேறான விளைவுகளைத் தரக்கூடியன என்பதை ஒத்துக்கொள்கிறேன். முதலாவது நிலையிலே, கருத்தினை உள்ளிடுகின்றவர் யாரென்பது குறித்து, உள்ளிடுகின்றவர் அல்லாத இன்னொருவருக்கு நல்லதாகவோ கெட்டதாகவோ பாதிப்பேதும் ஏற்படுவதில்லை. எல்லாப்புகழும் அந்த அநாமதேயருக்கே.

ஆனால், ஏற்கனவே அறியப்பட்ட ஒருவர் பெயரிலே இன்னொருவர் அநாமதேயமொன்று பதியும்போது, அந்த அறியப்பட்டவருக்கு நல்லதாகவோ கெட்டதாகவோ நிச்சயமாகப் பாதிப்பு ஏற்படுகின்றது. இங்கே முக்கியமான பதங்கள், "நல்லதாகவோ", "கெட்டதாகவோ" என்பனவாகும். முதற்பார்வையிலே, இப்படியான அநாமதேயங்கள், எப்போதுமே தாம் தாங்கும் பெயருக்குரியவரின் கீர்த்திக்கு அபகீர்த்தி விளைவிப்பதற்ககாகவோ அல்லது தாம் அறுத்துறுத்து எதிர்ப்புத்தெரிவிக்கும் கருத்துகளுக்குக் கெடுதல் விளைவிப்பதற்காகவோ செயற்படுவதாக வாசிப்பவருக்குத் தோன்றலாம்; ஆனால், இந்த இடத்திலே வாசிக்கின்றவர் கொஞ்சம் நிதானிக்க வேண்டும்; ஏனென்றால், இப்படியான நிதானமின்மையினை எதிர்பார்த்தே இந்தவகை முகமூடிகள் பெருமளவிலே செயற்படுகின்றனர் என நான் கருதுகின்றேன். எழுதுகின்றவர் எழுதுகின்ற தொனி, பேசுகின்ற விடயம், அவர் கொண்டிருக்கும் பெயருக்கு உரித்தானவர் கொண்டிருக்கக்கூடிய கருத்து என்பவற்றினையெல்லாம் ஒன்றாகச் சேர்த்தே இதனைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். இன்னொருவர் பெயரிலே பொய்யாக எழுதுகிறவர், முன்னையவர் பெயருக்குக் கெடுதல் விளைவிப்பதாக இருந்தால், அவரின் கருத்தின் தொனியிலே நிதானமின்மையும் ஆத்திரமேம்படுதலும் அதிக சந்தர்ப்பங்களிலே எண்ணிக்கையிலே அதிகமான பின்னூட்டங்கள் இல்லாமலும், அப்படி இருக்கும்பட்சத்திலே இருப்பின், அவற்றிலே சொன்னதையே சுட்டிக்கொண்டிருக்கும் கிளிப்பிள்ளைத்தனமோ அல்லது முன்னைப்பின்னைக்குத் தொடர்ச்சியின்மையோ இன்றி குறிப்பிட்ட பதிவுக்கான முழங்காலின் தட்டுப்படுதலுக்கு மூளை, முண்ணாண் துடிப்பான பின்னூட்டங்களாகவே இருக்கும். இவை வாசிக்கும்போது, உணரப்படக்கூடியன. ஆனால், இப்படியான தன்மையின்றி, பின்னூட்டங்களிலும் அநாமதேயப்பதிவுகளிலும் ஒரு தொடர்ச்சியும் திட்டமிட்ட கருத்தூட்டும் தன்மையும் வெகுநிதானமும் உண்மையான பெயருக்குரியவர்மீது அதீதப்படுத்தப்பட்ட வெறுப்பும் சுட்டிக்காட்டப்பட்டுக்கொண்டேயிருப்பின், அந்தப்பதிவு, யாரின் பெயரிலே பதியப்படுகின்றதோ, அவருக்கு நல்லது விளைவிக்கவே அவர்கருத்தினைச் சார்ந்த இன்னொருவரோ சிலரோ செய்கின்றார் எனலாம். அந்தப்பெயருக்குரிய மெய்யான ஆள்மீது ஒரு பரிதாபத்தினை ஏற்படுத்துமுகமாக இது செய்யப்படக்கூடும். உதாரணமாக, இப்போது (மெய்யான) டோண்டு ஐயா அவர்களின் பெயரிலே பொய்யான டோண்டுகளினாலே பதியப்படும் பதிவுகளால், டோண்டு ஐயா மீது "ஐயோ பாவம்; இப்படியாக வாட்டப்படுகின்றாரே" என உங்களுக்குப் பரிதாபம் ஏற்பட்டிருக்கின்றதா, அல்லது "டோண்டுவுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்" என மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றதா? எனக்கென்றால், அவர்மீது பரிதாபமே ஏற்படுகின்றது. ஆனால், அதை ஏற்படுத்தவேண்டுமென்ற நோக்கத்திலேயே அவரின் கருத்துகளோடு ஒப்புள்ள முகமூடிகள், பெயரிலிகள் (நான் சொல்வதாவது, பொதுப்பெயர்ச்சொல்களான, "முகமூடி", "பெயரிலி" இனை, குறித்து ஆள்சுட்டுப்பெயர்களான, "முகமூடி", "பெயரிலி" இனை அல்ல) ஏற்படுத்தியதாக இருக்கக்கூடாது? கவனியுங்கள்; அப்படித்தான் என்று அறுதியாகச் சொல்லவரவில்லை; நிச்சயமாக, எல்லாவற்றுக்கும் விதிவிலக்குகள் இருக்கக்கூடும். ஆனால், அப்படியும் இருக்கக்கூடுமல்லவா?

இதுபோலவே, கருத்துகள் சம்பந்தப்பட்டு, அதீதமாக விகாரப்படுத்தப்பட்டு, வெறுப்பு, ஆதரவு, அன்பு, வன்பு காட்டப்படுகையிலே, அது சொல்லப்படும் கருத்துக்கு எதிர்க்கருத்தினைச் சொல்வதாக இருக்கக்கூடும். இந்தவகையிலேயே பொடியன்களின் புத்தமதம் தழுவுதல் குறித்த பகிடியும் (ரோஸாவசந்த் அந்நியன் பட விமர்சனத்துக்கு எழுதியதுபோல) வஞ்சப்புகழ்ச்சியாக இருக்கக்கூடும்.

இப்போது, சிக்கலென்னவென்றால், இப்படியான நிலையினை நல்ல முறையிலே எவ்வாறு கையாளுவது என்பதாகும்; "மயிலே மயிலே இறகுபோடு" என்பதால் பயனாகாது; கூடவே, "நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன்; நீ அழுகிற மாதிரி அழு" என்ற மாதிரியான இன்னோர் ஆள்பெயரிலே பதியும் அநாமதேய பதிஞர்கள் தூங்கும் பாவனையிலிருந்து எழும்பப்போவதில்லை. எல்லாவற்றுக்கும்மேலாக, இஃது அநாமதேயத்தினைக் கருத்துச்சுதந்திரத்துக்காகப் பயன்படுத்தும் "நல்ல முகமூடிகள்" இன் ஊடகத்தேவையிலேயும் சிக்கலேற்படுத்துகின்றது. இந்தக்காரணத்தினாலேயே, blogger/blogspot பதிவுகளின் பின்னூட்டங்களிலே அநாமதேயங்களினைத் தடைசெய்யும் தேர்வினை நான் தேர்வதில்லை. "இந்த அநாமதேயக்கருத்துச்சுதந்திரத்தினைத் தந்திருக்கிறேன்; முறையாகப் பயன்படுத்திக்கொள்; நான் போய் நீ யாரென்று தேடிக்கொண்டிருக்கப்போவதில்லை; ஆனால், அதையே இருட்டறையிலே கறுப்புப்பூனையை யார் தேடமுடியுமென்று எண்ணிக்கொண்டு திட்டினால், திட்டு; வெட்டினால், வெட்டு; ஆனால், திட்டமுன்னாலும் வெட்டமுன்னாலும், இருட்டிலே தேடும் விளக்குநுட்பம் வந்துவிட்டதென்பதை எண்ணிக்கொண்டு செய்" என்பதே என் நிலைப்பாடு. திட்டுவதும் வெட்டுவதும் இல்லாவிட்டாலும், சுவையின்றி இணைய வாழ்க்கை கடந்து போய்விடுகின்றது;-) பிச்சைக்குப் போன புத்தர் "பிச்சை தராமற் எனத் திட்டியவனுக்குச் சொன்னதுபோல, "ஏற்றுக்கொண்டது எனக்கு; ஏற்க மறுத்தது, இன்னும் உன்னிடமே" என்பதுதான் என் சித்தாந்தம்; ஆனால், அதற்கப்பாலும்போய், ஆள்மாறாட்டப்பெயரிலே எனக்குக் கெடுதல் செய்ய முயன்றால், ஆளினை என் வசதிக்கும் எல்லைக்கும் உட்பட்ட வகையிலே அறிந்து கொள்ளும்வண்ணம், என் பதிவினைத் தயார் செய்து வைத்திருப்பேன். அதற்கப்பாலே தப்பிச் செயற்படுகின்றாரெனில், சம்பந்தப்பட்டவனான நான் - நான்மட்டுமே அல்லது என்னால் நியமிக்கப்பட்டவர் மட்டுமே- அதற்கான தக்க நடவடிக்கைகளை தக்க ஊடகங்களூடாக எடுப்பேன்; அதைத்தவிர, வேறேதும் அந்நிலையினைச் சரிப்படுத்தப்போவதில்லை. கோரிக்கைகள், வேண்டுகோள் விடுப்பதால், திட்டமிட்டே கெட்டபெயரினை ஏற்படுத்த நினைப்பவனுக்கு உற்சாகமே பீறிட்டு, இன்னும் இரண்டு குத்துக்கரணங்கள் போடுவானேயொழிய ஏதும் நிகழப்போவதில்லை. கல்லெறிந்த சந்திப்போக்கிரிக்குக் காசைக்கொடுத்துவிட்டுப்போங்கள்; அந்த உற்சாகத்திலே அடுத்து, வரும் முரடனுக்குக் கல்லெறிந்து வாங்கிக்கட்டிக்கொள்ளட்டும்; இல்லை, அவன்/அவள் முரடு யார், சாது யாரென்று அடையாளம் கண்டு தாக்கக்கூடிய புத்திசாலியாக அவன்/அவள் பதிவுகளிலே தெரிந்தால், அவன்/அவள் "நீங்கள் இல்லை" என்று மற்றோருக்கு உணர்த்த முடியாத பட்சத்திலும் அப்படி மற்றோருக்கு நீங்கள் உணர்த்தியே ஆகவேண்டுமென்ற அடிப்படைத்தேவை உங்களுக்கு இருக்கும்பட்சத்திலும் தகுந்த இடத்துக்கு அறிவியுங்கள்; அவனுக்கோ/அவளுக்கோ இணையச்சேவை, பதிவுச்சேவை வழங்கும் நிறுவனத்துக்குச் சட்டரீதியான பொறுப்பிருக்கின்றது. அனுப்புவதும் முகமூடிச்சேவைவழங்கியூடாக வந்தால், அந்த முகமூடிச்சேவைவழங்கிக்கு அறிவியுங்கள். (ஆனால், முகமூடிச்சேவைவழங்கிகளிலே பல, வாசிக்க அனுமதி தரும்; ஆனால், பின்னூடமிட விடா; இந்த முகமூடிகளிலே எத்தனைபேர் - இலங்கை அரசுக்காகச் செயற்பட்ட உம்பிரட்டோ குவி போன்ற soc.culture.tamil இலே அலைந்த அனுரா குலதுங்க போன்றோர் அல்லாதவிடத்து - தமது காசினை விட்டு இந்த முகமூடிவிளையாட்டினைச் செய்வார்களென்று எண்ணிப்பாருங்கள்) இப்படியான முகமூடிகள் மெய்யான ஆட்களாகச் சட்டத்துக்கு மிகவும் பயந்தவர்களாக இருப்பார்களென்பதே எனது அனுமானம்; நாளைக்குச் செய்தொழில் போய், சட்டமும் பின்முதுகிலே சுரண்டத்தொடங்குமென்ற எண்ணமே இவர்களை ஆட்டிவி(ர)ட்டும். இத்தனை முறைகளினையும் சொன்ன ஒழுங்குகளிலே செய்து பாருங்கள். விரும்பினால் (இஃது எனக்கு உடன்பாடு இல்லாதபோதுங்கூட), ஆக, பதிவான பெயர்கொண்டோரே உள்ளிடலாமென்ற தேர்வினை மட்டுமே உங்கள் பதிவுகளிலே ஏற்படுத்துங்கள். ஆனால், அவன் இன்னொரு பதிவிலே போய் உங்கள் பெயரிலே பதிந்தால், அந்தப் பதிவாளரின் உதவியோடு ஆளை அடையாளம் கண்டுகொள்ள முயலுங்கள். இந்த இடத்திலே, கருத்துமுரண்பாடு எதுவிருப்பினும், அடுத்தவர் தானே ஆளைக் காண உதவுவாரென்ற நிலை ஏற்படவேண்டும்; அப்படியாக, அடுத்த பதிவாளர் ஆள்மாறாட்டக்காரர் முகவரி அறிந்தும் தரமறுப்பின், அதனை ஆதாரங்களுடன் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்நிலையிலே, அறிந்தும் பேசமறுக்கும் அடுத்த பதிவாளரும் ஆள்மாறாட்டக்குற்றத்துக்கு உள்ளாகின்றார்.

இந்தப்படிமுறையிலே, நீங்கள் ஆள்மாறாட்டக்காரரைக் கண்டுபிடிக்க அணுகாமல், தொடர்ந்து "ஆள்மாற்றாடம் பண்ணுகிறார் பண்ணுகிறார்" என்று ஒன்றுக்குமேற்பட்ட தரம், மற்றோருக்குத் தெளிவுபடுத்தியபின்னும், கத்திக்கொண்டிருப்பீர்களானால், இந்தவகைப்பட்ட வேற்றாள் பெயர்களிலே பதியும் முகமூடிகளின் முக்கியநோக்கம், கருத்துமயக்கம் ஏற்படுத்துவதும் பேசும் விடயத்திலிருந்து திசைதிருப்புதலுமென்று கருதுவதோடு, அவர் என்ன செய்கின்றாரென்று நீங்களும் அறிந்திருக்கக்கூடுமோ என்றுதான் நான் சந்தேகப்படுவேன். இதன்மூலம், உங்களுக்குப் பரிதாபத்தினை ஏற்படுத்திக்கொள்ளுதலே உங்கள் நோக்கமென்றாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.

எழுதியதை வாசித்துச் சீர்ப்படுத்தச் சோர்வாக இருப்பதால், அப்படியே விட்டிருக்கிறேன். இதெல்லாம் பெரிய நசிகேதன் காலதேவனுக்கு இடைப்பட்ட இரகசியம்; அதைச் சீர்ப்படுத்திச் சொல்ல..... இதை எழுதினதுக்கே முக்கால்மணிநேரம் அநியாயச்செலவு;-)

AnionMass எ. அனோனிமாசு எ. -/பெயரிலி. ;-)

'06 ஜூன், 28 செவ். 13:48

1 Comments:

Blogger Muthu said...

///இதெல்லாம் பெரிய நசிகேதன் காலதேவனுக்கு இடைப்பட்ட இரகசியம்; அதைச் சீர்ப்படுத்திச் சொல்ல..... இதை எழுதினதுக்கே முக்கால்மணிநேரம் அநியாயச்செலவு;-)///

பெயரிலி,
இப்பதிவை முழுவதும் புரிந்துகொள்ள எண்ணிப் படிப்பவர்களுக்கு அதைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை, குறைந்த படசம் எனக்கு அவ்வளவு நேரம் எடுக்கும் :-).

July 9, 2005 at 10:49 AM  

Post a Comment

<< Home