Friday, July 08, 2005

கூர்ப்பு

வியாழன் காலை எழுந்து இணையத்தினைப் பார்த்தபோது, பிபிஸி தளத்திலே இலண்டனில் குண்டுவெடிப்பு என்றிருந்தார்கள். ஜி-8 நாடுகளின் கூட்டம் தொடர்பாக எதிர்ப்புக்காட்டும் அழிவுவாதிகளின் மொலடோவ் கொக்டேயில் வகையான சின்னதாகவிருக்குமென்று மற்ற வழமையான தளங்களைப் பார்த்தேன். எல்லாவிடத்திலும் இலண்டன் குண்டுவெடிப்பு. திரும்பி பிபிஸி வந்து பார்த்தால், 9/11 நியூயோர்க் வகையான வெடிப்பென்ற விபரம் விரிவாகத் தெரிந்தது. தொலைக்காட்சியைப் போட்டால், எல்லா அலைவரிசைகளிலும் மாறாமல், ஒரே படங்களையே காட்டிக்கொண்டிருந்தார்கள். நண்பரொருவரின் தொலைபேசி வந்தது; பேசிவிட்டு, வழக்கம்போல சாப்பிட்டுக்கொண்டே பெரிமேஸனைப் பார்த்துவிட்டு, முதல்நாளிரவு ஜி-8 பற்றிக் கைகிறுக்கினதைப் போட்டேன். பின்னால், தொடர்வண்டிக்கு வந்து வேலைக்குச் செல்கை. வண்டியிலே சனம் குறைவாகவே இருந்தது; ஆனால், அஃது எந்த விதத்திலும் என்னைப் பாதிக்கவில்லை; வேலைநேரத்திலும் வலைப்பதிவுகளைப் பார்த்தேன்; இலண்டன் குண்டுவெடிப்புகள் குறைத்து நிறையப்பதிவுகள்; வாசிப்பு. வீடு திரும்பும்போது, சனம் வழக்கம்போல, நிறைந்தே வண்டி. பாதிநேரம் ஏதோ புத்தகத்தை வாசித்துக்கொண்டும் மீதி நேரம் தூங்கிக்கொண்டும் வீடுவந்தேன். வீட்டுவந்து தொலைக்காட்சிகளிலே மாறிமாறி CSI, Without a Trace ஆகியன பார்த்து, Charlie Rose, News Hour, BBC ஆகியவற்றினைப் பார்த்துக்கொண்டு மகனோடு விளையாடிக்கொண்டிருந்தேன். வலைப்பூக்களைப் பார்த்த பின்னால், நித்திரையாகிவிட்டேன். காலை எழுந்து, வலைப்பூ, பெரிமேஸன், கொஞ்சம் வேலைத்தர எழுத்துவேலை, வேலைக்குப் பயணம். பயணத்திலே வழக்கமான அளவுக்குச் சனம். பாதி வழியிலேதான் உறைத்தது......

........."இந்தக்குண்டுவெடிப்பு எந்தவிதமான பாதிப்பினையும் என்னுள்ளே எழுப்பவில்லை." "ஐயோ இத்தனை அப்பாவி மனிதர்கள் இறந்து விட்டார்களே" என்றோ "இவர்களின் அரசு செய்தவற்றுக்கு இப்படித்தான் நடக்கும்; நடக்கவேண்டும்" என்றோ கவலையாகவோ மகிழ்வாகவோ எந்த உணர்வும் எனக்கு ஏற்படவில்லை; ஆக, மிஞ்சிப்போய் எழுந்தது, "எத்தனை பேர் இறந்திருக்கின்றார்கள்?" "ஆகா, ஆக முப்பத்திமூன்று; இப்போது நாற்பத்தொன்பது. சரி." - ஒரு கிரிக்கட் விளையாட்டிலே மொத்த ஓட்டத்தொகை கேட்கும் விடுப்புணர்வுமட்டுமே எனக்குள். குறைந்த பட்சம், நேற்றோ இன்றோ தொடர்வண்டியிலே பயணம்போகையிலே, "இதற்குள்ளே குண்டிருந்து வெடித்துவிட்டால்?" என்ற அச்சங்கூட தொலைக்காட்சியிலே, மெட்ரோ பத்திரிகையிலே பொஸ்ரன் உள்ளான தினசரிப்பயணங்கள் குறித்துக் காட்டவும் கேள்விகேட்கவும் செய்யும்போது எழவில்லை. வழக்கம்போல, ஏறி, இருந்து, இறங்குகிறேன்....

....இந்தக்குண்டு வெடிப்புகள் எனக்கு ஏதாவது பயத்தினைத் தந்திருக்கின்றனவென்றால், அது என்னைக்குறித்த பயத்தினைத்தான். உலகிலே நிகழும் எந்த வெடிப்பும் இறப்பும் - குறிப்பாக, தம்மளவிலே நேரடியாக கொல்பவரின் கெடுதலுக்குக் காரணமாகாத & தம்மை விரும்பும் தம்மால் விரும்பப்படும் தம்மளவிலே நேரடியாக கொல்பவரின் கெடுதலுக்குக் காரணமில்லாத மனிதர்களைக் கொண்ட மனிதர்களின் இறப்பும்- என்னிலே எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதிருக்கும் என் மரத்த மனநிலை என்னைப் பயப்படுத்துகின்றது; அந்தளவிலே எனக்கு நானே பயப்படுகின்றேன்.

இந்நிலை ஏன் ஏற்பட்டதென்று சரியாகத் தெரியவில்லை; யோசித்துப்பார்க்கும்போது, குறைந்தது எண்ணும் விரல்களுக்கடங்காத காரணங்கள் தெரிகின்றன. இப்படியான செய்திகளைக் கேட்டுக்கேட்டு பத்தோடு இது பதினொன்றென அலுத்துவிட்டதாகவிருக்கலாம்; கொல்லப்பட்டவர்களினை நேரடியாகத் தெரியாததாகவிருக்கலாம்; இறப்பின் கோரத்தினை "அட இவ்வளவுதானா இந்நிகழ்விலே இரத்தமும் நிணமும் இறந்தார் எண்ணிக்கையும்" என்று ஒப்பீட்டளவிலே பார்க்கும்தன்மை ஏற்பட்டுவிட்டதாகவிருக்கலாம்; இவர்களின் அரசின் முற்பகற்செயற்பாடுகளுக்கான பிற்பகல்விளைவுகள்தானே என்ற உணர்வாகவிருக்கலாம்; "அங்கே கணக்குக் காட்டப்படாமலே செத்ததுக்கு இங்கே செத்த இந்தத்தொகை ஒரு பொருட்டா?" என்ற குரூரத்தன்மைக்குப் பழக்கப்பட்டுப்போய்விட்டதாகவிருக்கலாம். "கொன்றவனுக்கும் இதை நியாயப்படுத்துமளவுக்கு எதேனும் இழப்பு (எந்தளவுக்கு) இருந்திருக்கோ?" என்று இப்போதெல்லாம் இப்படியான நிகழ்வுகளைக் காணும்போது எழுகிற கேள்வி தந்த மரத்தன்மையாகவிருக்கலாம்; "இப்படியாக முன்னர் எத்தனை; இன்னும் இனியும் எத்தனையோ?" என்பதை எண்ணி இஃது என் கைக்கும் கருத்துக்கும் அப்பாற்பட்ட விடயமென்று பெற்றுக்கொண்ட/என்னை நானே திருப்திப்படுத்திக்கொள்ளும் சுடலைஞானத்தன்மையாகவிருக்கலாம்; இப்படியானவை ஆக நிகழ்வுகளே, ஆனால், இவை விளைவிக்கும் அரசியல்மாற்றங்களும் இவை பற்றிய அரசியல்வாதிகளின் அரசுகளின் திரிப்புகளும் நுழைவுகளுமே வருந்தவும் மகிழவும் கருத்துக்கானவை என்றதுமாதிரியான வேறொரு ஏரணம்சார்தளத்திலே நின்று காணப் பழக்கப்பட்டுவிட்டிருக்கலாம். அல்லது, மீளமீள Grounddog Day இலே பில் முரே போய்க்கொண்டிருந்ததுபோன்ற, Star Trek இலே ஒரு மாறாக்காலத்துளிக்குள்ளே தொக்கிப்போனதுபோன்ற, ஒரே தினமே தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பதான கனவுநிலையென உள்ளே உணர்ந்து கொள்ளும் நிலையாகவுங்கூடும். எதுவென்று நிச்சயமாகத் தெரியவில்லை. அதனால், இக்குண்டுவெடிப்பினைக் குறித்து எதையுமே எழுத - எழுதப்பட்டவற்றிலே, சரி, பிழையென பின்னூட்டம் இடக்கூட- விழைவும் வரவில்லை.

எனக்குக் கேடேதும் விளைவிக்காத இன்னொரு மனிதன் - தனக்கென குடும்பம், கனவுகள், நடப்புகள் கொண்டிருக்கும் இன்னொரு மனிதன் - அநாவசியமாக அறியாக்காரணத்துக்காக, தான் அறியாதவர்களால், அவனைத்தானென்று குறி வைத்துக் கொல்ல வராது தம் கருத்தை, தம் அவலத்தினை உணர்த்துக்கின்றோம் என்று எண்ணிக்கொண்டவர்களாலே கொல்லப்படும்போது, அதற்காக இறந்தவனுக்காக வருந்தவோ கொன்றவனுக்காக மகிழ்ச்சியடையவோ முடியாமல், உள்ளே விறைத்துப்போய், இன்று மற்றுமொரு நாளேயென்பதுவாக நான் நடந்துக்கொண்டிருக்கும் இந்நிலையை ஞானியர் போற்றலாம்; வேட்கையுறலாம்; ஆனால், மனிதனென வாழ விழைகின்றவன் என்ற அளவிலே, நான் எண்ணி அச்சமுறுகிறேன். சற்றுச்சற்றாக விடமேற்றி உடல் பழக்கி விடமாகவே ஆகிப்போன நீலகேசி-நாகநந்தி ஞாபகம் வந்துபோனார்; நானும் அப்படியாக ஆகிவிட்டேனா? தெரியவில்லை. இருக்கலாம். அஃது என்னைக் குறித்து என்னைப் பயமுறுத்துகின்றது.

'05 ஜூலை, 08 வெள். 16:18 கிநிநே.

Tuesday, June 28, 2005

பன்னியன்


'06 ஜூன், 28 செவ். 13:48கிநிநே.

டோண்டு முதற்கொண்டு, முத்து, ஸ்ரீரங்கன் வரையான பலர் அநாமதேயங்கள் குறித்து அளவுக்கு மீறி அநாவசியமாகக் கவலைப்பட்டுக்கொள்கின்றீர்களெனத் தோன்றுகின்றது. நிச்சயமாக, யாரும் அறியா அநாமதேயங்களாகப் பதிவதும் அறிந்த ஒருவர் பெயரிலே அநாமதேயங்கள் பதிவதும் வேறான விளைவுகளைத் தரக்கூடியன என்பதை ஒத்துக்கொள்கிறேன். முதலாவது நிலையிலே, கருத்தினை உள்ளிடுகின்றவர் யாரென்பது குறித்து, உள்ளிடுகின்றவர் அல்லாத இன்னொருவருக்கு நல்லதாகவோ கெட்டதாகவோ பாதிப்பேதும் ஏற்படுவதில்லை. எல்லாப்புகழும் அந்த அநாமதேயருக்கே.

ஆனால், ஏற்கனவே அறியப்பட்ட ஒருவர் பெயரிலே இன்னொருவர் அநாமதேயமொன்று பதியும்போது, அந்த அறியப்பட்டவருக்கு நல்லதாகவோ கெட்டதாகவோ நிச்சயமாகப் பாதிப்பு ஏற்படுகின்றது. இங்கே முக்கியமான பதங்கள், "நல்லதாகவோ", "கெட்டதாகவோ" என்பனவாகும். முதற்பார்வையிலே, இப்படியான அநாமதேயங்கள், எப்போதுமே தாம் தாங்கும் பெயருக்குரியவரின் கீர்த்திக்கு அபகீர்த்தி விளைவிப்பதற்ககாகவோ அல்லது தாம் அறுத்துறுத்து எதிர்ப்புத்தெரிவிக்கும் கருத்துகளுக்குக் கெடுதல் விளைவிப்பதற்காகவோ செயற்படுவதாக வாசிப்பவருக்குத் தோன்றலாம்; ஆனால், இந்த இடத்திலே வாசிக்கின்றவர் கொஞ்சம் நிதானிக்க வேண்டும்; ஏனென்றால், இப்படியான நிதானமின்மையினை எதிர்பார்த்தே இந்தவகை முகமூடிகள் பெருமளவிலே செயற்படுகின்றனர் என நான் கருதுகின்றேன். எழுதுகின்றவர் எழுதுகின்ற தொனி, பேசுகின்ற விடயம், அவர் கொண்டிருக்கும் பெயருக்கு உரித்தானவர் கொண்டிருக்கக்கூடிய கருத்து என்பவற்றினையெல்லாம் ஒன்றாகச் சேர்த்தே இதனைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். இன்னொருவர் பெயரிலே பொய்யாக எழுதுகிறவர், முன்னையவர் பெயருக்குக் கெடுதல் விளைவிப்பதாக இருந்தால், அவரின் கருத்தின் தொனியிலே நிதானமின்மையும் ஆத்திரமேம்படுதலும் அதிக சந்தர்ப்பங்களிலே எண்ணிக்கையிலே அதிகமான பின்னூட்டங்கள் இல்லாமலும், அப்படி இருக்கும்பட்சத்திலே இருப்பின், அவற்றிலே சொன்னதையே சுட்டிக்கொண்டிருக்கும் கிளிப்பிள்ளைத்தனமோ அல்லது முன்னைப்பின்னைக்குத் தொடர்ச்சியின்மையோ இன்றி குறிப்பிட்ட பதிவுக்கான முழங்காலின் தட்டுப்படுதலுக்கு மூளை, முண்ணாண் துடிப்பான பின்னூட்டங்களாகவே இருக்கும். இவை வாசிக்கும்போது, உணரப்படக்கூடியன. ஆனால், இப்படியான தன்மையின்றி, பின்னூட்டங்களிலும் அநாமதேயப்பதிவுகளிலும் ஒரு தொடர்ச்சியும் திட்டமிட்ட கருத்தூட்டும் தன்மையும் வெகுநிதானமும் உண்மையான பெயருக்குரியவர்மீது அதீதப்படுத்தப்பட்ட வெறுப்பும் சுட்டிக்காட்டப்பட்டுக்கொண்டேயிருப்பின், அந்தப்பதிவு, யாரின் பெயரிலே பதியப்படுகின்றதோ, அவருக்கு நல்லது விளைவிக்கவே அவர்கருத்தினைச் சார்ந்த இன்னொருவரோ சிலரோ செய்கின்றார் எனலாம். அந்தப்பெயருக்குரிய மெய்யான ஆள்மீது ஒரு பரிதாபத்தினை ஏற்படுத்துமுகமாக இது செய்யப்படக்கூடும். உதாரணமாக, இப்போது (மெய்யான) டோண்டு ஐயா அவர்களின் பெயரிலே பொய்யான டோண்டுகளினாலே பதியப்படும் பதிவுகளால், டோண்டு ஐயா மீது "ஐயோ பாவம்; இப்படியாக வாட்டப்படுகின்றாரே" என உங்களுக்குப் பரிதாபம் ஏற்பட்டிருக்கின்றதா, அல்லது "டோண்டுவுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்" என மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றதா? எனக்கென்றால், அவர்மீது பரிதாபமே ஏற்படுகின்றது. ஆனால், அதை ஏற்படுத்தவேண்டுமென்ற நோக்கத்திலேயே அவரின் கருத்துகளோடு ஒப்புள்ள முகமூடிகள், பெயரிலிகள் (நான் சொல்வதாவது, பொதுப்பெயர்ச்சொல்களான, "முகமூடி", "பெயரிலி" இனை, குறித்து ஆள்சுட்டுப்பெயர்களான, "முகமூடி", "பெயரிலி" இனை அல்ல) ஏற்படுத்தியதாக இருக்கக்கூடாது? கவனியுங்கள்; அப்படித்தான் என்று அறுதியாகச் சொல்லவரவில்லை; நிச்சயமாக, எல்லாவற்றுக்கும் விதிவிலக்குகள் இருக்கக்கூடும். ஆனால், அப்படியும் இருக்கக்கூடுமல்லவா?

இதுபோலவே, கருத்துகள் சம்பந்தப்பட்டு, அதீதமாக விகாரப்படுத்தப்பட்டு, வெறுப்பு, ஆதரவு, அன்பு, வன்பு காட்டப்படுகையிலே, அது சொல்லப்படும் கருத்துக்கு எதிர்க்கருத்தினைச் சொல்வதாக இருக்கக்கூடும். இந்தவகையிலேயே பொடியன்களின் புத்தமதம் தழுவுதல் குறித்த பகிடியும் (ரோஸாவசந்த் அந்நியன் பட விமர்சனத்துக்கு எழுதியதுபோல) வஞ்சப்புகழ்ச்சியாக இருக்கக்கூடும்.

இப்போது, சிக்கலென்னவென்றால், இப்படியான நிலையினை நல்ல முறையிலே எவ்வாறு கையாளுவது என்பதாகும்; "மயிலே மயிலே இறகுபோடு" என்பதால் பயனாகாது; கூடவே, "நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன்; நீ அழுகிற மாதிரி அழு" என்ற மாதிரியான இன்னோர் ஆள்பெயரிலே பதியும் அநாமதேய பதிஞர்கள் தூங்கும் பாவனையிலிருந்து எழும்பப்போவதில்லை. எல்லாவற்றுக்கும்மேலாக, இஃது அநாமதேயத்தினைக் கருத்துச்சுதந்திரத்துக்காகப் பயன்படுத்தும் "நல்ல முகமூடிகள்" இன் ஊடகத்தேவையிலேயும் சிக்கலேற்படுத்துகின்றது. இந்தக்காரணத்தினாலேயே, blogger/blogspot பதிவுகளின் பின்னூட்டங்களிலே அநாமதேயங்களினைத் தடைசெய்யும் தேர்வினை நான் தேர்வதில்லை. "இந்த அநாமதேயக்கருத்துச்சுதந்திரத்தினைத் தந்திருக்கிறேன்; முறையாகப் பயன்படுத்திக்கொள்; நான் போய் நீ யாரென்று தேடிக்கொண்டிருக்கப்போவதில்லை; ஆனால், அதையே இருட்டறையிலே கறுப்புப்பூனையை யார் தேடமுடியுமென்று எண்ணிக்கொண்டு திட்டினால், திட்டு; வெட்டினால், வெட்டு; ஆனால், திட்டமுன்னாலும் வெட்டமுன்னாலும், இருட்டிலே தேடும் விளக்குநுட்பம் வந்துவிட்டதென்பதை எண்ணிக்கொண்டு செய்" என்பதே என் நிலைப்பாடு. திட்டுவதும் வெட்டுவதும் இல்லாவிட்டாலும், சுவையின்றி இணைய வாழ்க்கை கடந்து போய்விடுகின்றது;-) பிச்சைக்குப் போன புத்தர் "பிச்சை தராமற் எனத் திட்டியவனுக்குச் சொன்னதுபோல, "ஏற்றுக்கொண்டது எனக்கு; ஏற்க மறுத்தது, இன்னும் உன்னிடமே" என்பதுதான் என் சித்தாந்தம்; ஆனால், அதற்கப்பாலும்போய், ஆள்மாறாட்டப்பெயரிலே எனக்குக் கெடுதல் செய்ய முயன்றால், ஆளினை என் வசதிக்கும் எல்லைக்கும் உட்பட்ட வகையிலே அறிந்து கொள்ளும்வண்ணம், என் பதிவினைத் தயார் செய்து வைத்திருப்பேன். அதற்கப்பாலே தப்பிச் செயற்படுகின்றாரெனில், சம்பந்தப்பட்டவனான நான் - நான்மட்டுமே அல்லது என்னால் நியமிக்கப்பட்டவர் மட்டுமே- அதற்கான தக்க நடவடிக்கைகளை தக்க ஊடகங்களூடாக எடுப்பேன்; அதைத்தவிர, வேறேதும் அந்நிலையினைச் சரிப்படுத்தப்போவதில்லை. கோரிக்கைகள், வேண்டுகோள் விடுப்பதால், திட்டமிட்டே கெட்டபெயரினை ஏற்படுத்த நினைப்பவனுக்கு உற்சாகமே பீறிட்டு, இன்னும் இரண்டு குத்துக்கரணங்கள் போடுவானேயொழிய ஏதும் நிகழப்போவதில்லை. கல்லெறிந்த சந்திப்போக்கிரிக்குக் காசைக்கொடுத்துவிட்டுப்போங்கள்; அந்த உற்சாகத்திலே அடுத்து, வரும் முரடனுக்குக் கல்லெறிந்து வாங்கிக்கட்டிக்கொள்ளட்டும்; இல்லை, அவன்/அவள் முரடு யார், சாது யாரென்று அடையாளம் கண்டு தாக்கக்கூடிய புத்திசாலியாக அவன்/அவள் பதிவுகளிலே தெரிந்தால், அவன்/அவள் "நீங்கள் இல்லை" என்று மற்றோருக்கு உணர்த்த முடியாத பட்சத்திலும் அப்படி மற்றோருக்கு நீங்கள் உணர்த்தியே ஆகவேண்டுமென்ற அடிப்படைத்தேவை உங்களுக்கு இருக்கும்பட்சத்திலும் தகுந்த இடத்துக்கு அறிவியுங்கள்; அவனுக்கோ/அவளுக்கோ இணையச்சேவை, பதிவுச்சேவை வழங்கும் நிறுவனத்துக்குச் சட்டரீதியான பொறுப்பிருக்கின்றது. அனுப்புவதும் முகமூடிச்சேவைவழங்கியூடாக வந்தால், அந்த முகமூடிச்சேவைவழங்கிக்கு அறிவியுங்கள். (ஆனால், முகமூடிச்சேவைவழங்கிகளிலே பல, வாசிக்க அனுமதி தரும்; ஆனால், பின்னூடமிட விடா; இந்த முகமூடிகளிலே எத்தனைபேர் - இலங்கை அரசுக்காகச் செயற்பட்ட உம்பிரட்டோ குவி போன்ற soc.culture.tamil இலே அலைந்த அனுரா குலதுங்க போன்றோர் அல்லாதவிடத்து - தமது காசினை விட்டு இந்த முகமூடிவிளையாட்டினைச் செய்வார்களென்று எண்ணிப்பாருங்கள்) இப்படியான முகமூடிகள் மெய்யான ஆட்களாகச் சட்டத்துக்கு மிகவும் பயந்தவர்களாக இருப்பார்களென்பதே எனது அனுமானம்; நாளைக்குச் செய்தொழில் போய், சட்டமும் பின்முதுகிலே சுரண்டத்தொடங்குமென்ற எண்ணமே இவர்களை ஆட்டிவி(ர)ட்டும். இத்தனை முறைகளினையும் சொன்ன ஒழுங்குகளிலே செய்து பாருங்கள். விரும்பினால் (இஃது எனக்கு உடன்பாடு இல்லாதபோதுங்கூட), ஆக, பதிவான பெயர்கொண்டோரே உள்ளிடலாமென்ற தேர்வினை மட்டுமே உங்கள் பதிவுகளிலே ஏற்படுத்துங்கள். ஆனால், அவன் இன்னொரு பதிவிலே போய் உங்கள் பெயரிலே பதிந்தால், அந்தப் பதிவாளரின் உதவியோடு ஆளை அடையாளம் கண்டுகொள்ள முயலுங்கள். இந்த இடத்திலே, கருத்துமுரண்பாடு எதுவிருப்பினும், அடுத்தவர் தானே ஆளைக் காண உதவுவாரென்ற நிலை ஏற்படவேண்டும்; அப்படியாக, அடுத்த பதிவாளர் ஆள்மாறாட்டக்காரர் முகவரி அறிந்தும் தரமறுப்பின், அதனை ஆதாரங்களுடன் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்நிலையிலே, அறிந்தும் பேசமறுக்கும் அடுத்த பதிவாளரும் ஆள்மாறாட்டக்குற்றத்துக்கு உள்ளாகின்றார்.

இந்தப்படிமுறையிலே, நீங்கள் ஆள்மாறாட்டக்காரரைக் கண்டுபிடிக்க அணுகாமல், தொடர்ந்து "ஆள்மாற்றாடம் பண்ணுகிறார் பண்ணுகிறார்" என்று ஒன்றுக்குமேற்பட்ட தரம், மற்றோருக்குத் தெளிவுபடுத்தியபின்னும், கத்திக்கொண்டிருப்பீர்களானால், இந்தவகைப்பட்ட வேற்றாள் பெயர்களிலே பதியும் முகமூடிகளின் முக்கியநோக்கம், கருத்துமயக்கம் ஏற்படுத்துவதும் பேசும் விடயத்திலிருந்து திசைதிருப்புதலுமென்று கருதுவதோடு, அவர் என்ன செய்கின்றாரென்று நீங்களும் அறிந்திருக்கக்கூடுமோ என்றுதான் நான் சந்தேகப்படுவேன். இதன்மூலம், உங்களுக்குப் பரிதாபத்தினை ஏற்படுத்திக்கொள்ளுதலே உங்கள் நோக்கமென்றாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.

எழுதியதை வாசித்துச் சீர்ப்படுத்தச் சோர்வாக இருப்பதால், அப்படியே விட்டிருக்கிறேன். இதெல்லாம் பெரிய நசிகேதன் காலதேவனுக்கு இடைப்பட்ட இரகசியம்; அதைச் சீர்ப்படுத்திச் சொல்ல..... இதை எழுதினதுக்கே முக்கால்மணிநேரம் அநியாயச்செலவு;-)

AnionMass எ. அனோனிமாசு எ. -/பெயரிலி. ;-)

'06 ஜூன், 28 செவ். 13:48

Wednesday, May 11, 2005

செம்மஞ்சட்சரக்கின் விளைவு

சுந்தரவடிவேலின் செம்மஞ்சள் சரக்கு பதிவிலே வாசனுக்குப் பதிலாகக் கொடுத்த பின்னூட்டம் போக மறுப்பதால் (நீண்டுவிட்டதோ?), இங்கே.

இப்பதில் அவசரமாக எழுதப்பட்டதால், இலக்கணத்திருத்தங்களும் மேலதிக இணைப்புகளும் கொடுக்கப்படவில்லை. பின்னொரு முறை விரிவாக எழுத முடியுமென நம்புகிறேன்.
=================================

லூயிஸியானா, மிஸிஸிப்பி, அலபாமா மாநிலங்களிலே இந்த வியட்நாம் போர் காலத்து மாசு வேதியலாயுதங்கள் மூடித் தாழ்க்கும் இடங்களாப் பயன்படுவதையிட்டு இன்னமும் சின்னச் சின்ன சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், அவை பெரிதும் வெளியே பேசப்படுவதில்லை. இதிலே இனஞ்சார் நச்சுத்தன்மை (racial toxicity) உம் ஒரு பெரிய விடயம். இது தனியே இப்படியான செம்மஞ்சட்சரக்குகளாலே மட்டுமல்ல, மருந்து தொடக்கம் வேறுபல வேதியல் உபவிளைவுகளினான உபாதையுங்கூட. உலூஸியானாவிலே நியூ ஓர்லியன்ஸுக்கும் மாநிலத்தலைநகர், பட்டன் உரூச்சுக்குமிடையே இருக்கும் இப்படியான தொழிற்சாலைப்பிரதேச நெடுஞ்சாலையை, Cancer alley என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், இதிலே பாதிக்கப்படுகின்றவர்களைப் பார்த்தால், கறுப்பினத்தவர்களும் வருவாய் குறைந்தவர்களுமே அதிகம். அப்படியாகத்தான் இடம் பார்த்துச் செயல் நடக்கின்றன. ஆனால், மூன்றாம் உலகநாடுகளும் ஏன் இந்தியா சீனா போன்ற தொழில்நுட்பத்தின் எதிர்காலமெனச் சொல்லப்படும் நாடுகளுங்கூட, இதே மாதிரியான அபிவிருத்தியடைந்த நாடுகளின் கழிவுகூடங்களாகச் சத்தமின்றி மாறிவருகின்றன. மற்றும்படி, அமெரிக்காவிலே, ஹட்சன் ஆற்றின் படுக்கை வண்டலிலே dioxin தொடக்கம் பல குளோரினேற்றப்பட்ட நச்சுக்கள் விதைக்கப்பட்டிருந்தன. ஆனால், அமெரிக்காவின் Superfund திட்டத்தின்கீழே பெருமளவிலே இவையெல்லாம் நீக்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், டயோக்ஸின் நச்சு அண்மையிலே பெரிமளவு பேசப்பட்டது தனிமனிதர் ஒருவருக்காக; உக்ரேனினின் விக்ரர் உயூசெங்கோவிற்கு ஊட்டப்பட்டிருக்கலாமென்பதற்காக.... எத்தனையோ மனிதர்கள் பிற இடங்களிலே சத்தமின்றி இறந்து கொண்டிருக்கின்றார்கள் :-(

=============================

1. Chemical Weapons Disposal and Environmental Justice

2. Beyond the Chemical Weapons Stockpile: The Challenge of Non-Stockpile Materiel

3.Alabama town wants chemical ‘hoods’
Army’s incineration of deadly gases creates national debate


4. Army begins chemical weapons burn

5. cancer Alley

6. PBS: Point Of View: http://www.pbs.org/pov/pov2002/fenceline/index.html இந்த விவரணத்தினை நான் பார்த்திருந்தேன். மிகவும் விரிவாக வறுமைக்கோடு/இனஞ்சார் நச்சுப்பரவல் குறித்து சிறப்பான நேர்முகத்தோடான விவரணம்

7. GE's Hudson River PCB (Arochor) dumping is an well known issue. A sort of informative link can be EPA's Hudson clean up site. ஹட்சன் குறித்து ஒரு விவரணமும் PBS இலே இருந்தது; அதிலே பழைய GE தலைவர் Jack Welch தங்களிலே பிழை என்பதை முழுக்க மறுப்பார் (இத்தனைக்கும் அவர் வேதியற்பொறியியலிலே கலாநிதிப்பட்டம் பெற்றவர்). கூடவே, நாடோடிப்பாடகர்(!), பீற் ஸீகர் (அண்ணாத்தைக்கு இங்கே ஒரு சலூட்டு), ஹட்ஸனைக் காப்பாற்றுவது குறித்த ஓர் அமைப்பே வைத்திருப்பவர், அது குறித்து, ஹட்ஸனிலே ஓடத்திலே சென்று குறித்துக் காட்டுவார். AMERICA'S FIRST RIVER தனிப்பட்ட அளவிலே, ஹட்ஸன் ஆற்றுப்படுக்கையிலே குளோரினேற்றப்பட்ட பல்பகுதிய மாசுக்களின் (Aroclor என்ற வணிகப்பெயர் கொண்ட PCB) பரம்பல் குறித்தே என் கலாநிதிப்பட்ட ஆய்வு பெருமளவு இருந்ததாலே, உசாத்துணைகள் சேகரித்து வைத்திருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது, எங்காவது இடுகிறேன். [ஆனால், நான் முன்னர் குறிப்பிட்டதிலே தெளிவாகப் பிரித்துச் சொல்லியிருப்பதுபோல, ஹட்ஸன் பல்பகுதியங்களுக்கும் வேதியலாயுதங்களுக்கும் ஏதும் சம்பந்தமில்லை]

8. பிற நாடுகளுக்கு முன்னேறியநாடுகள் அணு/வேதியற்கழிவினை அனுப்புவது குறித்து, நிறைய இணையத்திலே இருக்கின்றது.

ஒரு விடயமென்னவென்றால், அமெரிக்காவிலே Love Cannel சிக்கலுடனும் 1967 Rachel Carson இன் Silent Spring என்ற புத்தகம் (பறவை முட்டைகளின் கோது மெலிதாதல் குறித்தது) வெளிவந்ததோடும் (கூடவே 60 & 70 களின் நாட்டுநிலைகளோடும்) சூழல் குறித்தொரு விழிப்புணர்வு வந்தது. அதைத் தொடர்ந்து வந்த SUPERFUND என்ற CERCLA வரைவு, நச்சு, அதிசேதமான சூழலைச் சீர்திருத்தவும் தடுக்கவும் முயன்றதால், கடந்த இருபதாண்டுகளாக நாட்டிலே சூழல் சரியான திசையிலேதான் சென்று கொண்டிருந்தது. மேற்கூறிய CERCLA இலே பின்னாலே கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தங்கள், SARA போன்றவை அதிகேடான நச்சுக்களும் வேதிமப்பொருட்களும் தயாரிப்பது தொடக்கம், அதை அழிப்பதுவரையும் சரியான கணக்கு (காசிலே என்பதல்ல, இரசாயன, பௌதீகப்பண்புகளிலும் அளவீடுகளிலும்) அரசுக்குக் காட்டும் தேவையைக் கொண்டு வந்தன. ஆனால், புஷ் இளவல் வந்ததுடன், அறிவியலும் அரசியலும் முன்னைக்கு அதிதீவிரமாகக் கலந்துபோய்விட்டன. (ஐதரசன் வண்டி எல்லாம் கூட்டத்துக்கு நன்றாக இருக்கும்; செயற்படுத்த??) பாரமூலங்கள் நீரிலே இருக்கும் எல்லை தொடக்கம் எல்லாவற்றினையும் கிட்டத்தட்ட இச்சைப்படி அரசியற்பலமுள்ளவர்கள் மாற்றுகின்ற நிலை வந்தது. அம்மணி Christie Whitman னே அண்மையிலே தன் EPA வேலை தொடர்பாக தன் கட்சிக்காரர்களை NOW நிகழ்ச்சியிலே குறை சொன்னார் (அலாஸ்கா எரிபொருள் தொடர்பாக). ஆனால், ஐரோப்பா &கனடா, அமெரிக்காவிலும்விடக் கூடுதலான சூழலுணர்தலைக் கொண்டிருக்கின்றதென்பது என் உணர்தல்.

Tuesday, April 19, 2005

நாய்மணிக்கடி(கை)

97 இன் பழங்கடி

நாய்மணிக்கடி(கை)

முற்குறிப்பு:
கற்றோரெல்லோரும் கருத்துய்துணர்க - அதுவிட்ட
மற்றோரெல்லாம் திறக்க மற்றஞ்சல்.


தொகுப்பாசிரியர் குறிப்பு:
நாய்மணிக்கடி(கை) தொகுத்தவர், நாலாம் நூற்றாண்டே (நாய்க்கேதையா, கி.பி.யும் காபியும்?) வாழ்ந்த உடற்புழுதி ஞமலியார்.
இவ்வஞ்சலில் தெரு நாய்ப்பாடல்கள் மட்டுமே பிடிக்கப்பட்டு வாகனம் ஏற்றப்படுகிறது. மிகுதி பின்னே கடிக்கப்படும்.

பொறுக்கிநானூற்றிலும் சறுக்கிப்போனவை
----------------------------------

1.மெய்யின்பம் இணையப் பெற்றார் நிலை எடுத்துரைத்தல்
-----------------------------------------------

மெய்வருத்தம் பாரார்,
கண்துஞ்சார், பசி காணார்,
கணணிகண் internet
இணையப்பெற்றார்.

2. கோடரிதாசனின் விடுதலைக்கவி
------------------------------
அச்சமும் நாணமும் நாய்கட்கு வேணுமாம்
வால்மட்டும் போதும் எம் வக்கிற்கு...
...(மிகுதி கவிஞர் கடிதாங்கா(து) வெறிகொண்ட நாய் கொண்டுபோனதாய்ப் பின்வந்த கள்ளதாசன் ஓரிடத்தே 'நாய்நகர்ப்பள்ளு'வில் எடுத்துக் குரைக்கிறார்).

3. மூக்குப்பொடிப்புலவரின் நாய்விடுதூது
---------------------------------

நாயாய்! நாயாய்!
கம்பம்கால்தூக்கு நாயே!
நீ (விளக்குக்கம்பம்)
போகும் வழியில் என்
பொண்டாட்டி கண்டால்,
பெற்ற சம்பளமும் பொடிக்காரன்
பற்றியதைச் சொல்வாயா?*

*குறிப்பு: இவ்விடத்தே புலவர் மூக்கு அடைத்ததால், முகுதியொய்க் கொலைக்கமொன் வைரவர் அரச(சின்) மர நாட்டு நீராட்டுவிழாவில் தீவிரப்பங்கேற்கச் சென்றுவிட்டதாகக் கேள்வி (பதில் தெரியாது).


எலியரித்ததீறாக,
எஞ்சிக்கிடக்கும் தமிழ் கல்லறிஞர்கள் பாத்திரங்கள்/கோத்திரங்கள்/தோத்திரங்கள்
மின்வலை நிரப்பக்காணும்வரை,
இரம்பம்.?*

*குறிப்பு: இவ்விடத்தே புலவர் மூக்கு அடைத்ததால், முகுதியொய்க் கொலைக்கமொன் (அதாவது, மிகுதியைக் குலைக்கமுன்) வைரவர் அரச(சின்) மர நாட்டு நீராட்டுவிழாவில் தீவிரப்பங்கேற்கச் சென்றுவிட்டதாகக் கேள்வி (பதில் தெரியாது).


பிற்குறிப்பு:
^* எஞ்சிக்கிடக்கும் தமிழ்நாட்டு நல்லறிஞர்கள் பாத்திரங்கள்/கோத்திரங்கள்/தோத்திரங்கள் மின்வலையேற்றியே, பின், பிறநாட்டுநல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற்பெயர்ப்போம் என்ற உறுதியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சியிது. எமனை அஞ்சோம் (ஆனால், அதுபற்றி அவனுக்கென்ன கவலை?), எது வரினும் எமது இலட்சியம் நிறைவேற்றலே திண்ணமாய் உழைப்போம் என்ற எண்ணத்தே செயலுறும் முயற்சியிது. பொருள் நிறைந்தவர் பேசாமற் போவீர், தமிழ் நிறைந்தவர் தோள் துணை தாரீர்.

எலியரித்ததீறாக,
வலை நிரப்பக்காணும்வரை,
இரம்பம்.



நறுக் கடி II

முற்குறிப்பு:
புலவர்கள் பிழைபொறுக்க-பொறுக்காப்
பொறுக்கியர் தம் தர்ம அடி தவிர்க்க.

பொறுக்கிநானூறில் பிழைத்துப் பொறுக்கியெடுத்தவை
___________________________________________

1.பொருளீட்டிவந்த தலைவன் பொருமியது
----------------------------------
மோப்பக்குழையுமாம் அனிச்சம்பூ
மோப்பாமலே குழைந்தது, அவள்வைத்த
அடுப்புச் சோறு.


2.தலைவி தலைவனுக்குத் தலை(யில்) விதித்தது
-----------------------------------------
நீயும் நாயும் எத்துணைக் கேளிர்?
எந்தையும் நிந்தையும் எக்கணம் பிரிவில்லை.
செம்புலப்புயநீரெனத் தரை புணர்ந்திடும்-உன்
செந்நீர்.
கவனம்!


3.தலைவன் பற்றித் தலைவி தோழிக்குச் செப்பியவை
--------------------------------------------
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
கண்டனர் என்bank balance காதலவரவர்.

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
பெற்றோரிடம் பெற்று வரல்.


4.பாணன் புலவருக்குச் செப்பியது
----------------------------
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
திரையறிந்து நாள் நூறு ஓடும் படம்.


5.(புலவர் போன வண்டி) சிதறிய நாற்பத்தில் சேர்த்தெடுத்த சில
------------------------------------------------------

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தவர் அனுபவிக்குங்கால்.

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
வெள்ளநிவாரணம் போடுவானெனில்.

வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்மனக்
கள்ளத் தனையது உயர்வு.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
ஏராளம் கடன்கண்டார் கண்ணே உள.

நறுக் III

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து
முன்தோன்றிய மூத்தகுடி,
கண்டது கல்லும் மண்ணும்
கடல் கடந்து.


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
படித்துப் பள்ளி சென்ற பாலகன்,
படையினால் பற்றப்படான் துப்பாக்கிமுன்,
துப்பாக்கி வைத்திருக்கலாம் என்று
துப்பாம்.
தூ!


குஞ்சியழகும் கொடுந்தானைக்கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல- மனித நேயப்
பஞ்சத்தால், பிறநாட்டகதித் தஞ்சம்
கேட்டலே அழகு.


அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்,
பின் வந்த, அவள்
அண்ணனும் நோக்கினான்.
உடைந்தது கோ தன்
(உ)டல் முதுகென்பு வில்.


பெண்புத்தி pinபுத்தியென்பார்
அதுகுத்தி, மன இரத்தம்
வந்தோர்தான்.*


சொந்தச்சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டு
சிந்தை களிப்பா ரடீ;- மின்வலையே;
சில (நர) சிம்மத்தூ ருறைவாரடீ.


*pinபுத்தி : கருத்து உபயம், ஏதோ ஒரு (அழுகாத) பழம் சஞ்சிகை.

முற்குறிப்பு: அன்றைய சங்க காலம், இன்றைய பஞ்ச காலம் இரண்டும் கருதி, புலவர் பெருங்கடியூர் உடற்புழுதி ஞமலியார் (இ)யாசிப்பதற்காக (இ)யாத்தது; சங்ககாலச் சந்தர்ப்பம் தந்துள்ளார்; இக்காலத்திற்கானதை பொருள் (இல்லா) ஆசிரியரே போட்டுக்கொள்(ல்)க. (மூலப்பிரதி, பசியால் பாதி தின்னுற்ற பனையோலையிலிருந்ததால், சில இடங்களிற் தமிழ் குதறுண்டுள்ளது; மன்னிக்குக)
____________________________________________________________________
கலி(டி)யும் இன்ன(‘) பிற(ழ்)வும்
----------------------------

1. புலவர் புறநானூறு புத்திரருக்குப் புகட்டும்போது, அகமிருந்தெழுந்த பத்தினி நான்கு
-----------------------------------------------------------------------
i

"மலையும் மலை சார்ந்தவிடமும் குறிஞ்சி,
வனமும் வனஞ் சார்ந்தவிடமும் முல்லை,
வயலும் வயல் சார்ந்தவிடமும் மருதம்,
....ம் கடல் சார்ந்தவிடமும் நெய்தல்,
..................டமும் பாலை"
புதல்வனுக்குப் போதித்த புலவர் மனைப்
பத்தினி பட்டினி பொறுக்காமற் பொரிந்தாள்,
"தமிழும் தமிழ் சார்ந்தவிடமும் தரித்திரம்",
அடுக்களை அயர் பூனை துரத்தி.

ii வேறு

'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" கவியாத்த
கவிஞர்தம் காமக்கிளத்தி, கலி நொந்து கடித்தாள்,
"மனைப்பொருள் விற்று மாத மளிகை பெற்றாரை..
.......யார், மரத்தடி மடம் தூங்கு ஆண்டியோ?"

iii வேறேவேறு

கோனிடம் மானிய நெல் பெற்று வாழ்வாரே வாழ்வார் மற்றோர்
தமிழ்ப்புல்லுக்கு உரம்போட உடல்வெந்து சாவார்.

iv மிக வேறு

முதல்இலார்க்கும் ஊதியம் ஊதிவரும் மழைபோற்
கவிஉள்ளார்க்கோ கடனே நிலை.


2. தேரோடும் வீதியிலே (நீல. பத்மநாபன் மன்னிக்குக) மாதமான்யம்பெற்ற பை பலமுறை பறிகொடுத்த புலவர் புதுப்புலவருக்குப்(பு.பு.) புத்திபோதித்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் (பின்)பணப்
பொதி தூக்கி மெல்ல நழுவும்.


3. தீர்த்தயாத்திரை போகையிற் கள்வராற் கானகத்தே கொலையுண்ட முனிபுங்கவர்தம் முடிபங்கம் பு.பு. இற்கு எடுத்துரைத்தது
---------------------------------------------------------------------------------------------------------
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைதூக்கி
எல்லாவுயிரும் கொல்லும்.


4. கொற்றனிடம் கவியுடன் போன கவியிடம் அரசவைவாயிற்காப்போன் காணிக்கை கேட்டபோது முறையிட்டழுதது
---------------------------------------------------------------------------------------------

கற்க கசடறக் கற்க கற்றபின் நேர்முகங்
காணவே பொருள்கொடுத்து நிற்க.


5. முதலமைச்சர் பின் பதவிக்காய்க் காத்திருந்த கல்வியமைச்சர் முதல்வர் புத்திரர் பற்றிக் காதற்கிழத்தியிடம் கவலையுடன் கருவியது
--------------------------------------------------------------------------------------------------------------

தோன்றிற் புகழுடன் தோன்றுக அன்றில்
அரசு அமை(ச்சு)வது அசாத்தியம்.


6. நகரமாந்தர் அங்காடியில் குரங்காட்டியின் வித்தையிற் களித்தது கண்ட நற்பாணன், பாடினியிடமும் இன்னோர் விறலியிடமும் விரக்தியிற் சொன்னது
---------------------------------------------------------------------------------------------------------------------------
பைந்தமிழ்ப்பண்ணோடமைந்ததெல்லாம் குயிற்பாட்டல்ல கழுதைக்
குரலுக்குக் குரங்கா(ட்)டுவதே தமிழிசைக்கவி.



(நீதி : கவிவீட்டுக் கலியும் கவிபாடும்)

Thursday, February 10, 2005

அரைகுறை

அரைகுறை என்ற பெயரிலி