Friday, July 08, 2005

கூர்ப்பு

வியாழன் காலை எழுந்து இணையத்தினைப் பார்த்தபோது, பிபிஸி தளத்திலே இலண்டனில் குண்டுவெடிப்பு என்றிருந்தார்கள். ஜி-8 நாடுகளின் கூட்டம் தொடர்பாக எதிர்ப்புக்காட்டும் அழிவுவாதிகளின் மொலடோவ் கொக்டேயில் வகையான சின்னதாகவிருக்குமென்று மற்ற வழமையான தளங்களைப் பார்த்தேன். எல்லாவிடத்திலும் இலண்டன் குண்டுவெடிப்பு. திரும்பி பிபிஸி வந்து பார்த்தால், 9/11 நியூயோர்க் வகையான வெடிப்பென்ற விபரம் விரிவாகத் தெரிந்தது. தொலைக்காட்சியைப் போட்டால், எல்லா அலைவரிசைகளிலும் மாறாமல், ஒரே படங்களையே காட்டிக்கொண்டிருந்தார்கள். நண்பரொருவரின் தொலைபேசி வந்தது; பேசிவிட்டு, வழக்கம்போல சாப்பிட்டுக்கொண்டே பெரிமேஸனைப் பார்த்துவிட்டு, முதல்நாளிரவு ஜி-8 பற்றிக் கைகிறுக்கினதைப் போட்டேன். பின்னால், தொடர்வண்டிக்கு வந்து வேலைக்குச் செல்கை. வண்டியிலே சனம் குறைவாகவே இருந்தது; ஆனால், அஃது எந்த விதத்திலும் என்னைப் பாதிக்கவில்லை; வேலைநேரத்திலும் வலைப்பதிவுகளைப் பார்த்தேன்; இலண்டன் குண்டுவெடிப்புகள் குறைத்து நிறையப்பதிவுகள்; வாசிப்பு. வீடு திரும்பும்போது, சனம் வழக்கம்போல, நிறைந்தே வண்டி. பாதிநேரம் ஏதோ புத்தகத்தை வாசித்துக்கொண்டும் மீதி நேரம் தூங்கிக்கொண்டும் வீடுவந்தேன். வீட்டுவந்து தொலைக்காட்சிகளிலே மாறிமாறி CSI, Without a Trace ஆகியன பார்த்து, Charlie Rose, News Hour, BBC ஆகியவற்றினைப் பார்த்துக்கொண்டு மகனோடு விளையாடிக்கொண்டிருந்தேன். வலைப்பூக்களைப் பார்த்த பின்னால், நித்திரையாகிவிட்டேன். காலை எழுந்து, வலைப்பூ, பெரிமேஸன், கொஞ்சம் வேலைத்தர எழுத்துவேலை, வேலைக்குப் பயணம். பயணத்திலே வழக்கமான அளவுக்குச் சனம். பாதி வழியிலேதான் உறைத்தது......

........."இந்தக்குண்டுவெடிப்பு எந்தவிதமான பாதிப்பினையும் என்னுள்ளே எழுப்பவில்லை." "ஐயோ இத்தனை அப்பாவி மனிதர்கள் இறந்து விட்டார்களே" என்றோ "இவர்களின் அரசு செய்தவற்றுக்கு இப்படித்தான் நடக்கும்; நடக்கவேண்டும்" என்றோ கவலையாகவோ மகிழ்வாகவோ எந்த உணர்வும் எனக்கு ஏற்படவில்லை; ஆக, மிஞ்சிப்போய் எழுந்தது, "எத்தனை பேர் இறந்திருக்கின்றார்கள்?" "ஆகா, ஆக முப்பத்திமூன்று; இப்போது நாற்பத்தொன்பது. சரி." - ஒரு கிரிக்கட் விளையாட்டிலே மொத்த ஓட்டத்தொகை கேட்கும் விடுப்புணர்வுமட்டுமே எனக்குள். குறைந்த பட்சம், நேற்றோ இன்றோ தொடர்வண்டியிலே பயணம்போகையிலே, "இதற்குள்ளே குண்டிருந்து வெடித்துவிட்டால்?" என்ற அச்சங்கூட தொலைக்காட்சியிலே, மெட்ரோ பத்திரிகையிலே பொஸ்ரன் உள்ளான தினசரிப்பயணங்கள் குறித்துக் காட்டவும் கேள்விகேட்கவும் செய்யும்போது எழவில்லை. வழக்கம்போல, ஏறி, இருந்து, இறங்குகிறேன்....

....இந்தக்குண்டு வெடிப்புகள் எனக்கு ஏதாவது பயத்தினைத் தந்திருக்கின்றனவென்றால், அது என்னைக்குறித்த பயத்தினைத்தான். உலகிலே நிகழும் எந்த வெடிப்பும் இறப்பும் - குறிப்பாக, தம்மளவிலே நேரடியாக கொல்பவரின் கெடுதலுக்குக் காரணமாகாத & தம்மை விரும்பும் தம்மால் விரும்பப்படும் தம்மளவிலே நேரடியாக கொல்பவரின் கெடுதலுக்குக் காரணமில்லாத மனிதர்களைக் கொண்ட மனிதர்களின் இறப்பும்- என்னிலே எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதிருக்கும் என் மரத்த மனநிலை என்னைப் பயப்படுத்துகின்றது; அந்தளவிலே எனக்கு நானே பயப்படுகின்றேன்.

இந்நிலை ஏன் ஏற்பட்டதென்று சரியாகத் தெரியவில்லை; யோசித்துப்பார்க்கும்போது, குறைந்தது எண்ணும் விரல்களுக்கடங்காத காரணங்கள் தெரிகின்றன. இப்படியான செய்திகளைக் கேட்டுக்கேட்டு பத்தோடு இது பதினொன்றென அலுத்துவிட்டதாகவிருக்கலாம்; கொல்லப்பட்டவர்களினை நேரடியாகத் தெரியாததாகவிருக்கலாம்; இறப்பின் கோரத்தினை "அட இவ்வளவுதானா இந்நிகழ்விலே இரத்தமும் நிணமும் இறந்தார் எண்ணிக்கையும்" என்று ஒப்பீட்டளவிலே பார்க்கும்தன்மை ஏற்பட்டுவிட்டதாகவிருக்கலாம்; இவர்களின் அரசின் முற்பகற்செயற்பாடுகளுக்கான பிற்பகல்விளைவுகள்தானே என்ற உணர்வாகவிருக்கலாம்; "அங்கே கணக்குக் காட்டப்படாமலே செத்ததுக்கு இங்கே செத்த இந்தத்தொகை ஒரு பொருட்டா?" என்ற குரூரத்தன்மைக்குப் பழக்கப்பட்டுப்போய்விட்டதாகவிருக்கலாம். "கொன்றவனுக்கும் இதை நியாயப்படுத்துமளவுக்கு எதேனும் இழப்பு (எந்தளவுக்கு) இருந்திருக்கோ?" என்று இப்போதெல்லாம் இப்படியான நிகழ்வுகளைக் காணும்போது எழுகிற கேள்வி தந்த மரத்தன்மையாகவிருக்கலாம்; "இப்படியாக முன்னர் எத்தனை; இன்னும் இனியும் எத்தனையோ?" என்பதை எண்ணி இஃது என் கைக்கும் கருத்துக்கும் அப்பாற்பட்ட விடயமென்று பெற்றுக்கொண்ட/என்னை நானே திருப்திப்படுத்திக்கொள்ளும் சுடலைஞானத்தன்மையாகவிருக்கலாம்; இப்படியானவை ஆக நிகழ்வுகளே, ஆனால், இவை விளைவிக்கும் அரசியல்மாற்றங்களும் இவை பற்றிய அரசியல்வாதிகளின் அரசுகளின் திரிப்புகளும் நுழைவுகளுமே வருந்தவும் மகிழவும் கருத்துக்கானவை என்றதுமாதிரியான வேறொரு ஏரணம்சார்தளத்திலே நின்று காணப் பழக்கப்பட்டுவிட்டிருக்கலாம். அல்லது, மீளமீள Grounddog Day இலே பில் முரே போய்க்கொண்டிருந்ததுபோன்ற, Star Trek இலே ஒரு மாறாக்காலத்துளிக்குள்ளே தொக்கிப்போனதுபோன்ற, ஒரே தினமே தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பதான கனவுநிலையென உள்ளே உணர்ந்து கொள்ளும் நிலையாகவுங்கூடும். எதுவென்று நிச்சயமாகத் தெரியவில்லை. அதனால், இக்குண்டுவெடிப்பினைக் குறித்து எதையுமே எழுத - எழுதப்பட்டவற்றிலே, சரி, பிழையென பின்னூட்டம் இடக்கூட- விழைவும் வரவில்லை.

எனக்குக் கேடேதும் விளைவிக்காத இன்னொரு மனிதன் - தனக்கென குடும்பம், கனவுகள், நடப்புகள் கொண்டிருக்கும் இன்னொரு மனிதன் - அநாவசியமாக அறியாக்காரணத்துக்காக, தான் அறியாதவர்களால், அவனைத்தானென்று குறி வைத்துக் கொல்ல வராது தம் கருத்தை, தம் அவலத்தினை உணர்த்துக்கின்றோம் என்று எண்ணிக்கொண்டவர்களாலே கொல்லப்படும்போது, அதற்காக இறந்தவனுக்காக வருந்தவோ கொன்றவனுக்காக மகிழ்ச்சியடையவோ முடியாமல், உள்ளே விறைத்துப்போய், இன்று மற்றுமொரு நாளேயென்பதுவாக நான் நடந்துக்கொண்டிருக்கும் இந்நிலையை ஞானியர் போற்றலாம்; வேட்கையுறலாம்; ஆனால், மனிதனென வாழ விழைகின்றவன் என்ற அளவிலே, நான் எண்ணி அச்சமுறுகிறேன். சற்றுச்சற்றாக விடமேற்றி உடல் பழக்கி விடமாகவே ஆகிப்போன நீலகேசி-நாகநந்தி ஞாபகம் வந்துபோனார்; நானும் அப்படியாக ஆகிவிட்டேனா? தெரியவில்லை. இருக்கலாம். அஃது என்னைக் குறித்து என்னைப் பயமுறுத்துகின்றது.

'05 ஜூலை, 08 வெள். 16:18 கிநிநே.

1 Comments:

Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

wandererwaves.blogspot.com இல் பின்னூட்டம் இட முடியவில்லை. அதனால் இங்கே:

எனக்கு மட்டுந்தான் இப்படித் தோன்றுகிறது என எண்ணி இருந்தேன். இப்படி நினைப்பதற்கு நீங்கள்

//இப்படியான செய்திகளைக் கேட்டுக்கேட்டு பத்தோடு இது பதினொன்றென அலுத்துவிட்டதாகவிருக்கலாம்; கொல்லப்பட்டவர்களினை நேரடியாகத் தெரியாததாகவிருக்கலாம்; இறப்பின் கோரத்தினை "அட இவ்வளவுதானா இந்நிகழ்விலே இரத்தமும் நிணமும் இறந்தார் எண்ணிக்கையும்" என்று ஒப்பீட்டளவிலே பார்க்கும்தன்மை ஏற்பட்டுவிட்டதாகவிருக்கலாம்; இவர்களின் அரசின் முற்பகற்செயற்பாடுகளுக்கான பிற்பகல்விளைவுகள்தானே என்ற உணர்வாகவிருக்கலாம்; "அங்கே கணக்குக் காட்டப்படாமலே செத்ததுக்கு இங்கே செத்த இந்தத்தொகை ஒரு பொருட்டா?" என்ற குரூரத்தன்மைக்குப் பழக்கப்பட்டுப்போய்விட்டதாகவிருக்கலாம். //

என்று சொல்லியிருப்பவைதான் (எனக்கு) காரணங்களாக இருக்கின்றன.(என நினைக்கிறேன்):o(

எனக்கும் இந்த மனநிலை பயமாக இருக்கிறது. கூடவே சில பல கேள்விகளும் முளைக்கின்றன!

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பெயரிலி.

July 11, 2005 at 9:06 PM  

Post a Comment

<< Home