Tuesday, April 19, 2005

நாய்மணிக்கடி(கை)

97 இன் பழங்கடி

நாய்மணிக்கடி(கை)

முற்குறிப்பு:
கற்றோரெல்லோரும் கருத்துய்துணர்க - அதுவிட்ட
மற்றோரெல்லாம் திறக்க மற்றஞ்சல்.


தொகுப்பாசிரியர் குறிப்பு:
நாய்மணிக்கடி(கை) தொகுத்தவர், நாலாம் நூற்றாண்டே (நாய்க்கேதையா, கி.பி.யும் காபியும்?) வாழ்ந்த உடற்புழுதி ஞமலியார்.
இவ்வஞ்சலில் தெரு நாய்ப்பாடல்கள் மட்டுமே பிடிக்கப்பட்டு வாகனம் ஏற்றப்படுகிறது. மிகுதி பின்னே கடிக்கப்படும்.

பொறுக்கிநானூற்றிலும் சறுக்கிப்போனவை
----------------------------------

1.மெய்யின்பம் இணையப் பெற்றார் நிலை எடுத்துரைத்தல்
-----------------------------------------------

மெய்வருத்தம் பாரார்,
கண்துஞ்சார், பசி காணார்,
கணணிகண் internet
இணையப்பெற்றார்.

2. கோடரிதாசனின் விடுதலைக்கவி
------------------------------
அச்சமும் நாணமும் நாய்கட்கு வேணுமாம்
வால்மட்டும் போதும் எம் வக்கிற்கு...
...(மிகுதி கவிஞர் கடிதாங்கா(து) வெறிகொண்ட நாய் கொண்டுபோனதாய்ப் பின்வந்த கள்ளதாசன் ஓரிடத்தே 'நாய்நகர்ப்பள்ளு'வில் எடுத்துக் குரைக்கிறார்).

3. மூக்குப்பொடிப்புலவரின் நாய்விடுதூது
---------------------------------

நாயாய்! நாயாய்!
கம்பம்கால்தூக்கு நாயே!
நீ (விளக்குக்கம்பம்)
போகும் வழியில் என்
பொண்டாட்டி கண்டால்,
பெற்ற சம்பளமும் பொடிக்காரன்
பற்றியதைச் சொல்வாயா?*

*குறிப்பு: இவ்விடத்தே புலவர் மூக்கு அடைத்ததால், முகுதியொய்க் கொலைக்கமொன் வைரவர் அரச(சின்) மர நாட்டு நீராட்டுவிழாவில் தீவிரப்பங்கேற்கச் சென்றுவிட்டதாகக் கேள்வி (பதில் தெரியாது).


எலியரித்ததீறாக,
எஞ்சிக்கிடக்கும் தமிழ் கல்லறிஞர்கள் பாத்திரங்கள்/கோத்திரங்கள்/தோத்திரங்கள்
மின்வலை நிரப்பக்காணும்வரை,
இரம்பம்.?*

*குறிப்பு: இவ்விடத்தே புலவர் மூக்கு அடைத்ததால், முகுதியொய்க் கொலைக்கமொன் (அதாவது, மிகுதியைக் குலைக்கமுன்) வைரவர் அரச(சின்) மர நாட்டு நீராட்டுவிழாவில் தீவிரப்பங்கேற்கச் சென்றுவிட்டதாகக் கேள்வி (பதில் தெரியாது).


பிற்குறிப்பு:
^* எஞ்சிக்கிடக்கும் தமிழ்நாட்டு நல்லறிஞர்கள் பாத்திரங்கள்/கோத்திரங்கள்/தோத்திரங்கள் மின்வலையேற்றியே, பின், பிறநாட்டுநல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற்பெயர்ப்போம் என்ற உறுதியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சியிது. எமனை அஞ்சோம் (ஆனால், அதுபற்றி அவனுக்கென்ன கவலை?), எது வரினும் எமது இலட்சியம் நிறைவேற்றலே திண்ணமாய் உழைப்போம் என்ற எண்ணத்தே செயலுறும் முயற்சியிது. பொருள் நிறைந்தவர் பேசாமற் போவீர், தமிழ் நிறைந்தவர் தோள் துணை தாரீர்.

எலியரித்ததீறாக,
வலை நிரப்பக்காணும்வரை,
இரம்பம்.



நறுக் கடி II

முற்குறிப்பு:
புலவர்கள் பிழைபொறுக்க-பொறுக்காப்
பொறுக்கியர் தம் தர்ம அடி தவிர்க்க.

பொறுக்கிநானூறில் பிழைத்துப் பொறுக்கியெடுத்தவை
___________________________________________

1.பொருளீட்டிவந்த தலைவன் பொருமியது
----------------------------------
மோப்பக்குழையுமாம் அனிச்சம்பூ
மோப்பாமலே குழைந்தது, அவள்வைத்த
அடுப்புச் சோறு.


2.தலைவி தலைவனுக்குத் தலை(யில்) விதித்தது
-----------------------------------------
நீயும் நாயும் எத்துணைக் கேளிர்?
எந்தையும் நிந்தையும் எக்கணம் பிரிவில்லை.
செம்புலப்புயநீரெனத் தரை புணர்ந்திடும்-உன்
செந்நீர்.
கவனம்!


3.தலைவன் பற்றித் தலைவி தோழிக்குச் செப்பியவை
--------------------------------------------
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
கண்டனர் என்bank balance காதலவரவர்.

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
பெற்றோரிடம் பெற்று வரல்.


4.பாணன் புலவருக்குச் செப்பியது
----------------------------
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
திரையறிந்து நாள் நூறு ஓடும் படம்.


5.(புலவர் போன வண்டி) சிதறிய நாற்பத்தில் சேர்த்தெடுத்த சில
------------------------------------------------------

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தவர் அனுபவிக்குங்கால்.

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
வெள்ளநிவாரணம் போடுவானெனில்.

வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்மனக்
கள்ளத் தனையது உயர்வு.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
ஏராளம் கடன்கண்டார் கண்ணே உள.

நறுக் III

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து
முன்தோன்றிய மூத்தகுடி,
கண்டது கல்லும் மண்ணும்
கடல் கடந்து.


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
படித்துப் பள்ளி சென்ற பாலகன்,
படையினால் பற்றப்படான் துப்பாக்கிமுன்,
துப்பாக்கி வைத்திருக்கலாம் என்று
துப்பாம்.
தூ!


குஞ்சியழகும் கொடுந்தானைக்கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல- மனித நேயப்
பஞ்சத்தால், பிறநாட்டகதித் தஞ்சம்
கேட்டலே அழகு.


அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்,
பின் வந்த, அவள்
அண்ணனும் நோக்கினான்.
உடைந்தது கோ தன்
(உ)டல் முதுகென்பு வில்.


பெண்புத்தி pinபுத்தியென்பார்
அதுகுத்தி, மன இரத்தம்
வந்தோர்தான்.*


சொந்தச்சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டு
சிந்தை களிப்பா ரடீ;- மின்வலையே;
சில (நர) சிம்மத்தூ ருறைவாரடீ.


*pinபுத்தி : கருத்து உபயம், ஏதோ ஒரு (அழுகாத) பழம் சஞ்சிகை.

முற்குறிப்பு: அன்றைய சங்க காலம், இன்றைய பஞ்ச காலம் இரண்டும் கருதி, புலவர் பெருங்கடியூர் உடற்புழுதி ஞமலியார் (இ)யாசிப்பதற்காக (இ)யாத்தது; சங்ககாலச் சந்தர்ப்பம் தந்துள்ளார்; இக்காலத்திற்கானதை பொருள் (இல்லா) ஆசிரியரே போட்டுக்கொள்(ல்)க. (மூலப்பிரதி, பசியால் பாதி தின்னுற்ற பனையோலையிலிருந்ததால், சில இடங்களிற் தமிழ் குதறுண்டுள்ளது; மன்னிக்குக)
____________________________________________________________________
கலி(டி)யும் இன்ன(‘) பிற(ழ்)வும்
----------------------------

1. புலவர் புறநானூறு புத்திரருக்குப் புகட்டும்போது, அகமிருந்தெழுந்த பத்தினி நான்கு
-----------------------------------------------------------------------
i

"மலையும் மலை சார்ந்தவிடமும் குறிஞ்சி,
வனமும் வனஞ் சார்ந்தவிடமும் முல்லை,
வயலும் வயல் சார்ந்தவிடமும் மருதம்,
....ம் கடல் சார்ந்தவிடமும் நெய்தல்,
..................டமும் பாலை"
புதல்வனுக்குப் போதித்த புலவர் மனைப்
பத்தினி பட்டினி பொறுக்காமற் பொரிந்தாள்,
"தமிழும் தமிழ் சார்ந்தவிடமும் தரித்திரம்",
அடுக்களை அயர் பூனை துரத்தி.

ii வேறு

'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" கவியாத்த
கவிஞர்தம் காமக்கிளத்தி, கலி நொந்து கடித்தாள்,
"மனைப்பொருள் விற்று மாத மளிகை பெற்றாரை..
.......யார், மரத்தடி மடம் தூங்கு ஆண்டியோ?"

iii வேறேவேறு

கோனிடம் மானிய நெல் பெற்று வாழ்வாரே வாழ்வார் மற்றோர்
தமிழ்ப்புல்லுக்கு உரம்போட உடல்வெந்து சாவார்.

iv மிக வேறு

முதல்இலார்க்கும் ஊதியம் ஊதிவரும் மழைபோற்
கவிஉள்ளார்க்கோ கடனே நிலை.


2. தேரோடும் வீதியிலே (நீல. பத்மநாபன் மன்னிக்குக) மாதமான்யம்பெற்ற பை பலமுறை பறிகொடுத்த புலவர் புதுப்புலவருக்குப்(பு.பு.) புத்திபோதித்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் (பின்)பணப்
பொதி தூக்கி மெல்ல நழுவும்.


3. தீர்த்தயாத்திரை போகையிற் கள்வராற் கானகத்தே கொலையுண்ட முனிபுங்கவர்தம் முடிபங்கம் பு.பு. இற்கு எடுத்துரைத்தது
---------------------------------------------------------------------------------------------------------
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைதூக்கி
எல்லாவுயிரும் கொல்லும்.


4. கொற்றனிடம் கவியுடன் போன கவியிடம் அரசவைவாயிற்காப்போன் காணிக்கை கேட்டபோது முறையிட்டழுதது
---------------------------------------------------------------------------------------------

கற்க கசடறக் கற்க கற்றபின் நேர்முகங்
காணவே பொருள்கொடுத்து நிற்க.


5. முதலமைச்சர் பின் பதவிக்காய்க் காத்திருந்த கல்வியமைச்சர் முதல்வர் புத்திரர் பற்றிக் காதற்கிழத்தியிடம் கவலையுடன் கருவியது
--------------------------------------------------------------------------------------------------------------

தோன்றிற் புகழுடன் தோன்றுக அன்றில்
அரசு அமை(ச்சு)வது அசாத்தியம்.


6. நகரமாந்தர் அங்காடியில் குரங்காட்டியின் வித்தையிற் களித்தது கண்ட நற்பாணன், பாடினியிடமும் இன்னோர் விறலியிடமும் விரக்தியிற் சொன்னது
---------------------------------------------------------------------------------------------------------------------------
பைந்தமிழ்ப்பண்ணோடமைந்ததெல்லாம் குயிற்பாட்டல்ல கழுதைக்
குரலுக்குக் குரங்கா(ட்)டுவதே தமிழிசைக்கவி.



(நீதி : கவிவீட்டுக் கலியும் கவிபாடும்)